கள்ளக் காதலுக்கு இடையூறான கணவன் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை விழுப்புரம் அருகே மனைவி உட்பட 4 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், சயனைடு கொடுத்து கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன், 32; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி இரவு 9:00 மணிக்கு விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலை, இந்திரா நகர் பைபாஸ் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், கள்ளக்காதல் பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:மணிகண்டன், தனது மனைவி தமிழரசி மற்றும் 2 பிள்ளைகளோடு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தங்கி கட்டட வேலை செய்தார். அங்கு மேஸ்திரியாக பணிபுரிந்த சங்கருக்கும், தமிழரசிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த மணிகண்டன் தமிழரசியை கண்டித்துள்ளார். அதன்பிறகும் கள்ளக்காதல் தொடர்ந்ததால், சில மாதங்களுக்கு முன் மணிகண்டன் குடும்பத்துடன் சொந்த ஊரான வி.சித்தாமூருக்கு வந்தார். தமிழரசி சென்னையில் உள்ள சங்கருடன் மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து தமிழரசி, சங்கரிடம் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மணிகண்டனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர்.இதற்கு சங்கர், தனது உறவினர்களான திருக்காச்சூரை சேர்ந்த கார்த்திக் ராஜா, 25; அவரது மனைவி சுவேதா, 21; சங்கரின் கட்டுமான பொருட்கள் விற்கும் கடையில் பணிபுரியும் செஞ்சி அடுத்த கோணை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், 35; ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். சீனிவாசன் முன்பு, நகை பட்டறையில் வேலை செய்ததால், நகை செய்ய பயன்படும் சயனைடு கொடுத்து மணிகண்டனை கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது. மணிகண்டனுக்கு மது பழக்கம் உள்ளதால், அதில் கலந்து கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். பின், சீனிவாசன் தனது நண்பர் ஒருவர் மூலம் சயனைடு வாங்கியுள்ளார்.கடந்த 14ம் தேதி மணிகண்டனை, சுவேதா மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, கட்டட பணி சம்பந்தமாக பேசி, முன்பணம் வாங்க விழுப்புரம், இந்திரா நகர் பைபாஸ் ரோடு அருகே வரும்படி கூறியுள்ளார்.அங்கு வந்த மணிகண்டனை, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, கார்த்திக்ராஜா, சீனிவாசன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். சயனைடு கலந்த மதுவை குடித்த மணிகண்டன், சில நிமிடங்களில் இறந்ததும், அனைவரும் தப்பிச் சென்றனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து, சங்கர், தமிழரசி, சுவேதா, சீனிவாசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
'குண்டாஸ்' குற்றவாளி
மணிகண்டன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்ராஜா மீது, சென்னை, பூக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்துள்ளார். இவரை சமீபத்தில், சங்கர் ஜாமினில் வெளியே எடுத்து வந்ததும், இந்த கொலையில் ஈடுபடுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.