கடுகப்பட்டு கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்
செஞ்சி : கடுகப்பட்டு ஊராட்சி பொது மக்கள் பஸ் வசதி கேட்டு திடீர் சாலை மறியல் செய்தனர். வல்லம் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சியில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இந்த கிராம மக்கள் 2 கி.மீ., துாரம் நடந்து வந்த செஞ்சி-மேல்ஒலக்கூர் சாலையில் முக்குணம் கூட்ரோட்டில் பஸ் ஏறுகின்றனர். கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளியூரில் உள்ள பள்ளி கல்லுாரிகளில் படிக்கின்றனர்.அனைத்து அடிப்படை தேவைகளுக்கு கிராம மக்கள் செஞ்சிக்கு வரும் நிலை உள்ளது. தற்போது கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்பதுடன் கிராம சாலையும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதை கண்டிக்கும் வகையில் கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு மேல்ஒலக்கூரில் இருந்து செஞ்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முக்குணம் கூட்ரோட்டில் சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.இதையடுத்து 10.30 மணியளவில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.