காரைமேடு - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி மந்தம்; டிசம்பருக்குள் முடிக்க நகாய் கெடு
விக்கிரவாண்டி:விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையேயான நான்கு வழிச்சாலை பணியில், மூன்று கட்ட பணிகள் முடிந்து, போக்குவரத்து துவங்கிய நிலையில், சீர்கோழி காரைமேடு - நாகப்பட்டினம் இடையிலான 55.75 கி.மீ., சாலைப் பணி மந்தமாக நடந்து வருகிறது.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே, 179.5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை (என்.எச்.332ஏ) அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. பணியை, 4 கட்டங்களாக பிரித்து நகாய் ஒப்பந்தம் பணியை மேற்கொண்டது.இதில், விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் துவங்கி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் வரையில், 123.8 கி.மீட்டருக்கு, மூன்று கட்ட பணிகள் முடிந்துள்ளது.நான்காவது கட்ட பணியான, சீர்காழி காரைமேடு - நாகப்பட்டினம், புத்துார் ரவுண்டானா வரையிலான 55.75 கி.மீ., துாரத்திற்கு 1,906 கோடி ரூபாயில் பணியை, குஜராத்தை சேர்ந்த வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. பணிகள் மந்தம்
கடந்த 2021ல் துவங்கிய பணி, நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல், சாலைகள் அமைக்க தேவையான மண் கிடைக்காதது, பெஞ்சால் புயல் மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்று வரை பணிகள் முழுமை பெறவில்லை. 65 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.இச்சாலையில் திருக்கடையூர், காளியப்பநல்லுாரில் தலா ஒன்றும், காரைக்கால், நாகப்பட்டினத்தில் தலா 2 என, மொத்தம் 6 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு, சாலை இணைப்பு பணிகள் துவங்கியுள்ளன.உப்பனாறு, நந்தலாறு, வெட்டாறு உள்ளிட்ட 7 இடங்களில் ஆற்றைக் கடக்க பெரிய பாலம் பணிகளும், வாய்காலை கடக்கும் வகையில் 29 இடங்களில் கல்வெர்ட்கள், மழை நீர் வடிகால் வாய்கால், என 221 இடங்களில் சிறிய அளவிலான பாலம் பணிகள் நடந்து வருகிறது.சீர்காழி அடுத்த ஒழுகைமங்கலம் கிராமத்தில் உப்பனாறு பாலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து மேம்பாலத்தில் 'பவுசிங் கர்டர்' அமைக்கப்பட்டுள்ளது.திருக்கடையூர் பைபாஸ் சாலை அமைக்க இடையூறாக ஜெயபுரம் வேப்பச்சேரி சாலையில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணியில் ஆங்காங்கு சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள இடங்களில் மண் கொட்டி சாலை பணி நடந்து வருகிறது. வாகன ஒட்டிகள் அவதி
காரைக்காலில், திருநள்ளார் சாலையில் பச்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் 'பவுசிங் கர்டர்' தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் புறவழிச் சாலை 14 கி.மீ., துார பணியில் தெற்கு புறம் நாகப்பட்டினம் செல்லும் பகுதியில் மண் கொட்டி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் வடக்கு புறத்தில் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.அதேபோன்று, நாகப்பட்டினம் புறவழிச்சாலை 15 கி.மீ., துார பணியில் 35 சதவீதம் மட்டுமே சாலை அமைக்க மண் கொட்டப்பட்டுள்ளது. காரைமேடு - காரைக்கால் வரை ஆங்காங்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மண் சாலைகள் இருக்கும் பகுதிகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலைகளில் புழுதி பறப்பதால், ஒப்பந்ததாரர்கள் சாலையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் அடித்து வருகின்றனர். டிசம்பரில் முடியுமா
நாகப்பட்டினம் ஜீரோ பாயிண்ட் புத்துாரில் கோயம்புத்துார், திருச்சி, தஞ்சாவூர் சாலை மற்றும் காரைக்கால் - நாகப்பட்டினம் சாலைகளை இணைக்க ரவுண்டானா மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.மண் பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதியில் முடிக்க ஒப்பந்தாரருக்கு நகாய் கெடு விதித்துள்ளது.பணிகளை புதுச்சேரி நகாய் திட்ட அமலாக்க பிரிவு இயக்குநர் (பொறுப்பு ) வரதராஜன், பொறியாளர் ஜெகதீஷ் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கி வருகின்றனர்.