நமக்கு நாமே என களமிறங்கிய மக்கள் புத்துயிர் பெற்றது கோலியனுார் ஏரி
விழுப்புரம்:கோலியனுார் ஏரி, தன்னார்வலர்களால் முழுமையாக புனரமைக்கப்பட்டு, 53 ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விழுப்புரம், கோலியனுார் கிராமத்தில், 37 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறியது. விழுப்புரம் மாவட்ட நீர்நிலை புனரமைப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குழு சார்பில், கோலியனுார் ஏரியை புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, இதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான கோலியனுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் அதற்கான முயற்சிகளை மேற் கொண்டார். கடந்த ஆண்டு விழுப்புரம் கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் ஆகியோர் கோலியனுார் ஏரியை பார்வையிட்டனர். பின், கோலியனுார் ஒன்றிய அலுவலக மேற்பார்வையில், ஏரியை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை, 'எக்ஸ்னோரா' தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் 2024, மார்ச் 13ல் அனுமதி வழங்கப்பட்டது. சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் பங்களிப்பு நிதியாக, 35 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. கடந்தாண்டு ஏப்., 3ல் பணி துவங்கியது. தற்போதைய நிலையில், ஏரியின் மொத்த பரப்பளவு, 57 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏரியின் கரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ஏரிக்கரை பகுதியில் 8,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. ஏரி புனர மைப்பு பணி நடைபெற்ற பின், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு மேலும் பல கிராமங்களில் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்களின் பங்களிப்புடன் தங்கள் பகுதி ஏரிகளை புனரமைப்பதற்கு ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர்.