அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
செஞ்சி : கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்ததுசெஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 25ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 16ம் ஆண்டு திருத்தேர் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல், சாகை வார்த்தல் மற்றும் பூங்கரகம் ஊர்வலத்துடன் துவங்கியது.நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. அதனையொட்டி, அம்மச்சாரம்மனுக்கு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் சுமந்து சென்று செல்வ விநாயகர், சீனுவாச பெருமாள் மற்றும் அம்மச்சாரம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, வழக்கறிஞர் விஜய் மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவின் தொடர்ச்சியாக இன்று 21ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணமும், நாளை 22ம் தேதி குருபூஜையும், 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 25ம் தேதி காலை 8:30 மணிக்கு திருத்தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 7 நாட்களும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.