| ADDED : மார் 19, 2024 10:49 PM
விழுப்புரம் லோக்சபா தேர்தலில் திண்டிவனம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உத்தேச வேட்பாளர் என சமூகவலை தளங்களில் வைலராகியுள்ளது.லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு தொகுதி ஒதுக்கி தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அதேபோல் பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., ஓ.பி.எஸ்., அணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்தி தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர்.விழுப்புரம் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., கட்சி வேட்பாளராக ரவிகுமாரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., உத்தேச வேட்பாளராக வடிவேல் ராவணனை அறிவித்துள்ளது.இந்நிலையில் எதிர் கட்சியான அ.தி.மு.க.,விற்கு இது வரை சரியான கூட்டணி அமையாததால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒதுக்கவில்லை.விழுப்புரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தலைமையில் பாக்கியராஜ், டாக்டர் முத்தையன் உட்பட 47 பேர் மனு கொடுத்துள்ளனர்.இந்நிலையில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனனை அ.தி.மு.க., தலைமை விழுப்புரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டது போல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அக்கட்சியினரிடையே சலசலப்பையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.-நமது நிருபர்-