உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நான்குமுனை சிக்னலில் வாகன ஓட்டிகள் விதி மீறல்

நான்குமுனை சிக்னலில் வாகன ஓட்டிகள் விதி மீறல்

விழுப்புரம் : விழுப்புரம் நான்குமுனை சிக்னலில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நகரின் முக்கிய பகுதியாக, நான்குமுனை சிக்னல் சந்திப்பு உள்ளது. சென்னை, திருக்கோவிலுார், திருச்சி, புதுச்சேரி மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சிக்னல் வழியாக சென்று வருகின்றன. மேலும், நகரின் முக்கிய சிக்னலாக உள்ளதால், இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் மேற்கொள்கின்றன. இதனால், சிக்னலில் நான்கு புறங்களிலும் வாகனங்கள் செல்வதற்கு நேரம் ஒதுக்கி, பாதசாரிகள் கடந்து செல்ல அல் ஜீப்ரா கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நான்குமுனை சிக்னலில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி, பாதசாரிகள் நடந்து செல்லும் அல் ஜீப்ரா கோடுகள் மற்றும் அதனை தாண்டியும் நிற்கின்றனர். இதனால், பாதசாரிகள் கடந்து செல்ல நேரம் ஒதுக்கும்போது, நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். மேலும், சிக்னல் போடும் முன் சில வாகன ஓட்டிகள் புறப்பட்டு செல்கின்றனர். இதனால், சிக்னல் போட்ட பகுதியில் இருந்து வரும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த சிக்னல் அருகில் டிராபிக் போலீஸ் நிலையம் இருந்தாலும், வாகன ஓட்டிகளின் விதிமீறலை போலீசார் கண்டுகொள்வதில்லை. எனவே, சிக்னல் பகுதியில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது போலீஸ் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி