உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முத்தாம்பாளையம் ஏரி புனரமைப்பு பணிகள்... தீவிரம்; விழுப்புரத்தில் களமிறங்கிய தன்னார்வ குழுக்கள்

முத்தாம்பாளையம் ஏரி புனரமைப்பு பணிகள்... தீவிரம்; விழுப்புரத்தில் களமிறங்கிய தன்னார்வ குழுக்கள்

விழுப்புரம் புறநகர் பகுதியில் உள்ள முத்தாம்பாளையம் ஏரியின் நடுவில், திருச்சி-சென்னை ைப-பாஸ் சாலை கடந்து செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் சேர்த்து, 127.26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முத்தாம்பாளையம் ஏரி, உரிய பராமரிப்பின்றி, முட்புதர்கள் மண்டிக் கிடந்தது. பல ஆண்டுகளாக குப்பைகள் மற்றும் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு, அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தினால் அவதியடைந்து வந்தனர். இந்த ஏரியையொட்டி அமைந்துள்ள பொன் அண்ணாமலை நகர், சுந்தரம் நகர், ரஹமத் சிட்டி, ெசஞ்சி சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். இந்த ஏரியை சீரமைத்திட, தமிழக அரசு நீர்நிலை பாதுகாவலர் விருதுபெற்ற மணிகண்டன், நீர்வளத்துறை ஒருங்கிணைப்பில், காயத்திரி சாரிட்டிஸ், கலாம் நேஷன் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் , விழுப்புரம் கரிகாலன் சோழன் பசுமை மீட்புப் படை, முத்தாம்பாளையம் ஏரி ஆயக்கட்டுதாரர் மேம்பாட்டு சங்கம் முத்தாம்பாளையம் என்.டி.எஸ்.ஓ., எக்ஸ்னோரா, விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் மனிதம் காப்போம் குழு ஆகியோர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த குழுவினர் முத்தாம்பாளையம் பொதுமக்களுடன் இணைந்து, ஏரியை புனரமைக்கும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டுள்ளனர். கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், கூடுதல் கலெக்டர் பத்மஜாஆகியோர் பரிந்துரையின் பேரில், முத்தாம்பாளையம் ஏரி சீரமைப்பிற்காக அரசு நிதியுதவியாக ரூ. 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தன்னார்வலர்கள் மூலம் ரூ. 26 லட்சம் நிதியுதவி திரட்டி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஏரியை புனரமைக்கும் பணி, இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி-சென்னை பை-பாஸ் சாலையின் வலது புறம் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், 20 ஏக்கர் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளன.மேலும், 2 கி.மீ., நீளத்திற்கு கரைகள், 32 அடி முதல் 22 அடிவரை அகலப்படுத்தி, பலப்படுத்தப்பட்டன. இந்த ஏரியின் மையப்பகுதியில், 35 மீ., விட்டத்தில், தீவுக்காடு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது திருவாமத்துார் முதல் முத்தாய் பாளையம் வரை வரத்து வாய்க்கால் துார்வாரப்பட்டு வருகிறது.கரைகளை சுற்றி மரக்கன்று நட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 8 ஏரிகள்

முத்தாம்பாளையம் ஏரி பராமரிப்பு பணியை தொடர்ந்து, மரக்காணம், கோலியனுார் ஒன்றியப்பகுதியில் உள்ள 8 ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளது. இதே தன்னார்வ குழுக்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசுத் துறைகளுடன் இணைந்து ஏரிகளை புனரமைக்கும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, மரக்காணம் மற்றும் கோலியனுார் ஒன்றியங்களில் உள்ள கோலியனுார் ஏரி,கொளத்துார் ஒட்டன் ஏரி, முருக்கேரி ஏரி, வடநெற்குணம் ஏரி, வைடப்பாக்கம் ஏரி, வைடக்கப்பாக்கம் சாத்தான் ஏரி, ஏந்துார் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி ஆகியவை ஊரக வளர்ச்சித்துறை முகமையுடன் இணைந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை