நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
செஞ்சி; கல்யாணம்பூண்டியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் காணை மற்றும் விக்கிரவாண்டி ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் கல்யாணம்பூண்டியில் நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் சேகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் அறவாழி ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.விழுப்புரம் மாவட்டத்திற்கு 5 மற்றும் 6ம் தேதியன்று ஆய்வுக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது நந்தன் கால்வாய்க்கு 309 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தரும் படி கோரிக்கை மனு அளிப்பது, 25ம் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள், தன்னார்வலர்களை இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, செஞ்சி வன சரகத்தில் நந்தன் கால்வாயில் துார் வார அனுமதி கிடைக்காமல் பனைமலை ஏரிக்கு தண்ணீர் செல்வது தடை பட்டிருப்பதால், 10ம் தேதி நீர்வளத்துறை மற்றும் வனத்துறை அனுமதி பெற்று வனப்பகுதியில் தூர் வாருவது என தீர்மானம் நிறைவேற்றினர்.