உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரோந்து செல்ல போலீசும் இல்லை கண்காணிப்பு கேமராவும் பழுது செஞ்சியில் திருடர்கள் ஜாலி

ரோந்து செல்ல போலீசும் இல்லை கண்காணிப்பு கேமராவும் பழுது செஞ்சியில் திருடர்கள் ஜாலி

செ ஞ்சியில் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்களும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வருகின்றனர். அதிகாலை 4:00 மணிக்கு ஆடு, மாடு சந்தை துவங்கி 9:00 மணிக்கு முடிந்து விடும். பின், காய்கறி, மளிகை, கால்நடைகளுக்கான பொருட்கள் விற்பனை என 300க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் சந்தையிலும், சிங்கவரம் சாலையோரங்களிலும் கடை வைக்கின்றனர். இந்த கடைகளில் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கூட்டம் அலை மோதும். இந்த நேரத்தில் பொது மக்களிடம் பிக்பாக்கெட், மொபைல் போன் திருடுவது உள்ளிட்ட சம்பவங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. பிக்பாக்கெட் சம்பவங்களில் குறைந்த அளவு பணம் திருடு போவதால் போலீசில் புகார் செய்வதில்லை. மொபைல் போன் திருட்டு சம்பவங்களில் சிலர் மட்டும் புகார் செய்கின்றனர். சமீபத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவரிடம் மொபைல் போனை திருடி உள்ளனர். அவர், போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர். காலையில் வெவ்வேறு நேரத்தில் பள்ளிக்கு வரும் இவர்கள், மாலையில் பள்ளி முடிந்து ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் குவிகின்றனர். இந்த நேரத்தில் ஏராளமான சிறு சிறு தகராறுகளும், மாணவர்களுடன் மோதலும் ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன், பஸ் நிலையம் எதிரிலும், விழுப்புரம் ரோட்டிலும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. பெரிய அளவில் பணம் திருடு போகாமல் குறைந்த அளவு பணம் திருடு போனதால் இச்சம்பவங்களில் வழக்கு பதியவில்லை. பஸ் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடும் கூட்டம் திருவண்ணாமலையில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்லும் பஸ்களில் தங்களின் கை வரிசையை காட்டி வருகின்றனர். இவர்களின் நடமாட்டம் செஞ்சியில் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செஞ்சியில் குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் மாலை நேரத்தில் பஸ் நிலையத்தை கண்காணித்தனர். வார சந்தையிலும், பள்ளி வளாகங்களையும் கண்காணித்தனர். தற்போது செஞ்சி காவல் நிலையத்தில் குவியும் புகார்களை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் போதிய போலீசார் இல்லை. இதனால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த போலீஸ் பற்றாக்குறை உள்ளது. செஞ்சியில் பஸ் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், சமூக விரோதிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் செஞ்சிக்கு கூடுதல் போலீசாரை நியமித்து மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை