139 தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து கட்டமைப்புகளை புதுப்பிக்க உத்தரவு
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 139 தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, போதிய கட்டமைப்புகளை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் உயர், மேல்நிலை பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு, உட்கட்டமைப்பு குறித்து, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி (தனியார் பள்ளிகள்) அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு கடந்த 6,7ம் தேதிகளில், 139 பள்ளிகளை ஆய்வு செய்தனர். ஆய்வு அலுவலர்களின் அறிக்கையினை, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 9ம் தேதி மதிப்பாய்வு செய்து, ஆய்வு அலுவலர்களால் பள்ளிகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை உடனடியாக 7 நாட்களுக்குள் சரி செய்து, அதற்கான புகைப்படத்துடன் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தவறும் பட்சத்தில், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தந்த பள்ளி தாளாளர், முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.