ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
விழுப்புரம் : முத்தாம்பாளையம் ஏரியில் பனை விதைகள் நடும் பணியை எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்தார். விழுப்புரம், பைபாஸ் சாலை பகுதியில் உள்ள முத்தாம்பாளையம் ஏரியை துார்வாரி சீரமைக்கும் பணியை, அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டுள்ளனர். ஏரி முழுவதும் துார்வாரி, நீர் தேக்கும் வகையில், கரையும் சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு, எதிர்காலத்தில் படகு சவாரி விடும் விதத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணியினை ஊக்குவிக்கும் வகையில், ஏரி கரையில் 2 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், இன்ஸ்பெக்டர் ஜெரால்டுராபின்சன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா, கரிகால சோழன் பசுமை மீட்பு படை அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏரிக்கரையில் பனை விதைகளை நடும் பணியை மேற்கொண்டனர்.