உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுவர்கள் விபத்தை ஏற்படுத்தினால் பெற்றோருக்கு தண்டனை! புதிய சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற கோரிக்கை

சிறுவர்கள் விபத்தை ஏற்படுத்தினால் பெற்றோருக்கு தண்டனை! புதிய சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சிறார்கள் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த, பெற்றோருக்கு தண்டனை வழங்கும் விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் வாகன விபத்துகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனுபவமின்றி, விதிகளை மீறி கார், இரு சக்கர வாகனங்கள் இயக்குவதில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விதிகளை மீறி மாணவர்கள், சிறார்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இயக்குவதும் அதிகரித்துள்ளதால், விபத்துகளும் ஏற்படுகிறது. இத்தகைய விபத்துகளின்போது, இளம் சிறார்கள், மாணவர்கள் உயிரிழப்பதும், காயமடைந்து கை, கால்கள், உடல் உறுப்புகளை இழந்து தவிப்பதும் தொடர்கிறது. மேலும், இந்த இளம் சிறார்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளில் எதிர்புறத்தில் வரும் அப்பாவிகளும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்கிறது.இந்த விபத்துகளின் போது, விதிகள்படி போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுவதால், விழிப்புணர்வின்றி விபத்துகளும், விதிமீறல்களும் தொடர்கிறது. நகர பகுதிகளில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். சிலர் நெடுஞ்சாலைகளில் பைக் ரேஸ் சாகசத்திலும் ஈடுபடுகின்றனர். இளம் கன்று பயமறியாது என்பதற்கிணங்க சாலை குறுக்கிடும் இடங்கள், சாலை விதிகளை கவனத்தில்கொள்ளாமல் அதிவேகமாக இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது. இளம் சிறார் என்பதால், மன்னித்து விடுவதும் தொடர்வதால், விதிமீறலும் தொடர்கிறது.இந்திய அளவில் சாலை விபத்துகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு புதிய சட்டத்தை அமல்படுத்தியது. கடுமையான விதிகளின்படி அமல்படுத்தப்பட்ட அந்த சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், அந்த சிறார்களுக்கு விதிமீறி வாகனத்தை வழங்கிய பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், 3 ஆண்டு கட்டாயம் சிறை தண்டனை வழங்கப்படும், அந்த சிறார் ௨௫ வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறவும் தடை விதிக்கப்படும்.இந்த சட்டம் அமலில் உள்ளதால், சிறார்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், தற்போது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். 50 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை மட்டுமே 16 முதல் 18 வயது சிறார்கள் ஓட்டலாம். ஆனால், தற்போது 50 சிசி வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை. பேட்டரி வாகனங்களை கூட விதிகள்படி 18 வயதிற்கு குறைந்தவர்கள் இயக்குவது விதிமீறல் என்றனர். இதனால், சிறார்கள் வாகனங்களை இயக்குவதை தடுக்க போலீசார், போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜன 18, 2025 06:01

இந்த சிறுவர்களின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். ஆமா, காவல்துறை இது போன்ற வருங்கால ரௌடிகளை அள்ளி உள்ளே போட்டு சுளுக்கெடுக்காமல் என்ன கழட்டிக்கொண்டு இருக்கிறது?


புதிய வீடியோ