உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

திண்டிவனம் : திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் வெள்ள நீர் வெளியேறுவதற்கு அமைக்கப்படும் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் பணியில் ஒரு பக்கம் முடிந்த நிலையில், மறு பக்கம் சாலையை உடைத்து பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள காந்தி நகர், வகாப் நகர் பகுதியில் தொடர் மழை மற்றும் வெள்ள காலங்களில், மழைநீர் வீடுகளில் சூழ்வது தொடர்ந்தது.காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் அனைத்தும் காந்தி நகர் வழியாக கரைபுரண்டு வருவதால், அங்குள்ள குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்து வாடிக்கையாக நடைபெறும்.வழிந்தோடும் வெள்ள நீர் வெளியேற காந்தி நகர், வகாப் நகரில் குறுகிய வாய்க்காலாக இருப்பதும், மரக்காணம் சாலையில் செல்லும் பிரதான வெள்ளவாரி வாய்க்காலில் வெள்ள நீரை உள்வாங்கி வெளியேற்றும் வகையில் போதுமான அகலம் இல்லாமல் துார்ந்து கிடந்தது.இதனால் மழைக் காலங்களில் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துவிடும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வெள்ள நீர் தடையில்லாமல் வெளியேறி, திண்டிவனம் மெயின் ரோட்டில் உள்ள வெள்ள வாரி வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் நகாய் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் சாலையில் உள்ள வகாப் நகர் எதிரே புதுச்சேரி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டபுள் பாக்ஸ் கல்வெர்ட் அமைப்பதற்காக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.முதற்கட்டமாக திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் கல்வெர்ட் அமைக்கும் பணிக்காக, அந்த பகுதியின் சாலையில் ஒரு பக்கம் மட்டும் அடைக்கப்பட்டது.ஒரு பக்கத்தில் பணிகள் முடிவடைந்ததையொட்டி, சில நாட்களுக்கு முன் அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்றன. இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு பக்கத்தில் (புதுச்சேரி - திண்டிவனம் சாலை), டபுள் பாக்ஸ் அமைப்பதற்காக சாலையை உடைத்து பள்ளம் தோண்டும் பணி துவங்கியது.இதனால், நான்கு வழிச்சாலையில் ஒரு பக்கம் மட்டும் வாகனங்கள் செல்லும் வகையில், அதாவது திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் செல்லும் வாகனங்களும், அதே போல் புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்கள் செல்லும் வகையிலும் சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியில் வாகனங்கள் செல்வதால், அந்த பகுதியில் மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும், பணிகள் நடைபெறும் இடத்தில், புதுச்சேரியிலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களும் 'யூ டர்ன்' எடுத்துச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பணிகள் குறித்து நகாய் அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'டபுள் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் பணியில் தற்போது ஒரு பக்கம் முடிந்துள்ளது. இரண்டாவதாக நடைபெறும் கல்வெர்ட் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிந்துவிடும்' என்றனர்.டபுஸ் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் பணியை நிர்ணயித்த காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு நகாய் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ