| ADDED : பிப் 01, 2024 04:46 AM
விழுப்புரம்: விசாரணை கைதி இறப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டி பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி.,யிடம் மனு அளித்துள்ளார்.கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் மனைவி ரேவதி நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டலை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது மா.கம்யூ., கடலுார் மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மனு விபரம்:நெய்வேலியில் கடந்த 2015ம் ஆண்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக விசாரணைக்காக, பக்கத்து வீட்டில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த எனது கணவர் சுப்ரமணியத்தை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அடித்து துன்புறுத்தியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது கணவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇறந்தார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்த இவ்வழக்கு இன்று பிப்.1ம் தேதி முதல் கடலுார் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள போலீசார்நெய்வேலி உட்கோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா, தற்போது நெய்வேலி உட்கோட்டத்தை சேர்ந்த வடலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிறார். அவர், வழக்கின் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால், அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.