வன்கொடுமை தடுப்பு சட்டம் கண்காணிப்பு குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்ட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில், இந்த நிதியாண்டில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், 110 பேருக்கு தீருதவி தொகையாக 1 கோடி, 77 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் எந்த வித நிலுவையின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின், வன்கொடுமையால் பாதித்து இறந்த 28 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பஞ்சப்படி 252 சதவீதம் சேர்த்து மொத்தம் ரூ.17,600 இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதித்து இறந்த, 28 பேரின் வாரிசுதாரர்களில் 23 பேருக்கு அரசு பணி கூடுதல் நிவாரணங்களாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் தீண்டாமை ஒழிப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் வன்கொடுமை நிகழாமல் இருக்க பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளில் போலீசார் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற அடிப்படையில் சமூக விழிப்புணர்வு தொடர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தொழில் முனைவோர்களுக்கான கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ், வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகே சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காணை ஊராட்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், எஸ்.பி., சரவணன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, உதவி இயக்குநர் (வழக்கு நடத்துமை முகமை) கலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் குமரவேல், தனஞ்செழியன், வழக்கறிஞர் அகத்தியன், ஆறுமுகம், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.