விழுப்புரம், : விழுப்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம், கட்சிகளின் கொடிக் கம்பம் மற்றும் பேனர்கள் அமைப்பதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். முக்கிய சந்திப்புகளில், தடுப்பு ஏற்படுத்தி, அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சாலையோரம், தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கம்பத்தில் கடந்தாண்டு மே மாதம், அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி கட்சிக் கொடி ஏற்றி வைத்தார்.அடுத்த சில தினங்களில், அந்த இடத்தின் அருகே கொடிக்கம்பம் அமைக்க முயன்ற அ.தி.மு.க., வினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வை சந்தித்து, தங்களது கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டு, அ.தி.மு. க.,வினர் மனு அளித்தனர்.இதையடுத்து தே.மு.தி.க., - பா.ம.க., - பா.ஜ., வினரும் கொடி கம்பம் அமைக்க மனு அளித்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.இந்த பிரச்னையில் ஐகோர்ட் வழிகாட்டுதலின் பேரில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில், அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதிக்க முடியாது என நெடுஞ்சாலைத் துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க.,விற்கு மட்டும், அனுமதித்தது குறித்து எதிர்க்கட்சியினர் தரப்பில் பிரச்னை எழுப்பினர். தி.மு.க., கொடி கம்பம் ஓரிரு நாட்களில் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும், ஆளுங்கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற முடியாமல் வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.இதனையடுத்து, கடந்தாண்டு ஜூன் மாதம், அந்த இடத்தின் அருகே முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம் தலைமையில் அ.தி.மு.க., கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, அந்த பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்கின்றன. அதிரடி நடவடிக்கை
விழுப்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கட்சிகளின் கொடிக் கம்பம் மற்றும் பேனர்கள் அமைப்பதைத் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, கோலியனுார் கூட்ரோடு உள்ளிட்ட முக்கியமான சந்திப்புகளில், தடுப்பு ஏற்படுத்தினர். கொடிக்கம்பம், பேனர்கள் புதியதாக அமைப்பதை தடுக்கும் வகையில், துணியால் தடுப்பு ஏற்படுத்தி, போலீசாரின் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் செய்துள்ளனர்.அதில், 'காவல்துறை அறிவிப்பு, இந்த இடத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி சார்பில், பேனர்கள், கொடிக் கம்பங்கள் வைக்கக் கூடாது. மீறினால் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.