விழுப்புரம் அருகே ரயில்வே சுரங்கபாதை பணிகள் துரிதம்! போராட்டத்தால் தடையான பணிகளுக்கு விடிவுகாலம்
விழுப்புரம்; விழுப்புரம் அருகே கொளத்துாரில் பொதுமக்களின் போராட்டத்தை கடந்து ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் துவங்கி நடக்கிறது. பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால் ரயில்களின் வேகம் குறைவாக செல்கிறது.விழுப்புரம் - திருச்சி இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் தினந்தோறும் எண்ணற்ற ரயில்கள் செல்கிறது. அதிவேக ரயில்களும், வாராந்திர விரைவு ரயில்களும் சென்று வருகிறது. ரயில் பயணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் வழி மார்க்கத்தில் விழுப்புரம் அருகே கொளத்துார் கிராம பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட் இருந்தது.இந்த ரயில்வே கேட்டை கடந்து, அப்போது கொளத்துார், கண்டமானடி, காவணிப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களின் விவசாய பணிகள், அத்தியவாசிய பணிகளுக்காக விழுப்புரத்திற்கு வந்து சென்றனர். இந்த ரயில்வே கேட்டை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே நிர்வாகம் மூலம் மூடப்பட்டது.மக்களின் போராட்டம் நீடித்த நிலையில், அதிகாரிகள் மூலம் கண்டமானடி ரயில்வே கேட் வழியாக கடந்து செல்ல ஆலோசனை வழங்கி சமாதானம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 அரை ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே தண்டவாள பாதை 128 மைல் கல்லில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதலோடு, திருச்சி மார்க்க ரயில் பாதை செல்லும் தண்டவாளத்திற்கு கீழே சுரங்கவழி பாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கியது.இதை, கொளத்துார் கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இங்கு ஏரி உள்ளதால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பணிகளை ரயில்வே ஊழியர்கள் கிடப்பில் போட்டனர். இதையடுத்து, தற்போது ரயில்வே சுரங்கபாதை அமையவுள்ள கொளத்துார் பகுதியில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் விழுப்புரத்திற்கு செல்ல 8 கி.மீ., சுற்றி செல்வதால், ரயில்வே நிர்வாகம் மூலம் அமைக்கும் சுரங்கபாதை வழியால் 2 கி.மீ., செல்லும் சுலபமாக உள்ளது.இதையொட்டி, மக்களின் ஒப்புதலை பெற்று ரயில்வே ஊழியர்கள் கடந்த சில தினங்களாக கொளத்துாரில் திருச்சி ரயில்வே மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்திற்கு கீழே சுரங்கவழி பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சுரங்க வழிபாதையில் மழை காலங்களில் கூட மழைநீர் தேங்காத வகையில், 15 அடி உயரத்திலும், 10 அடி அகலத்திலும் தயார் செய்த 8 கேடர்களை வரவழைத்துள்ளனர்.இந்த கேடர்கள் ராட்சத கிரேன்கள் மூலம் துாக்கப்பட்டு, தண்டவாளம் கீழேவுள்ள பகுதியில் மண் தோண்டப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து பிட்டிங் செய்யப்படவுள்ளது. இந்த பணிகள் நடப்பதால், அந்த தண்டவாள பகுதியில் மட்டும் ரயில்கள் 20 கி.மீ., வேகத்தில் குறைவாகவும், பணிகள் முடிந்தவுடன் கூடுதல் வேகத்திலும் செல்லும். இந்த பணிகள் வரும் 19ம் தேதிக்குள் முடிவடைந்து, சுரங்கவழி பாதையில் கொளத்துார், வழுதரெட்டி, பெரியார் நகர், சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயணித்து செல்லலாம் என ரயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.