ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டமுன்னேற்ற பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி கூறியதாவது, மாவட்டத்தில், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும், குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களிடம் ஆய்வு செய்யப்படுகிறது.இதையொட்டி, தற்போது நடந்த கூட்டத்தில், அலுவலர்களிடம் பணி முன்னேற்றம் பற்றி கேட்டறியப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இந்தாண்டிற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5,500 வீடுகள் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்குவதற்கான பணி ஆணை வழங்கியுள்ளதால் பயனாளிகள் வீடு கட்டுமான பணிகள் துவங்கிட வேண்டும்.அந்தந்த தவணைக்கான தொகையை உடனே வழங்குவதோடு, கட்டு மான பணிக்கான சிமென்ட் மற்றும் கம்பிகளையும் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும். மேலும், கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.