வல்லம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பிற்கு ரூ.65 லட்சம் ஒதுக்கீடு
செஞ்சி:வல்லம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு சாகுபடிக்கு 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உதவி வேளாண்மை இயக்குனர் சரவணன் தெரிவித்தார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கான குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் வல்லம் வட்டாரத்திற்கு, 65 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. இத்திட்டப்படி ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், இயந்திரம் மூலமாக நடுவதற்கு ஏக்கருக்கு ரூ. 4000 விதமும், தேவையான நுண்ணுரங்கள் மற்றும் உயிர் உரங்களை 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.பருவமழை தற்போது பெய்து வருவதால் குறுவை சாகுபடி முன்கூட்டியே துவங்கி நடக்கிறது. இயந்திர நடவு செய்யும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிட்டா, அடங்கள், ஆதார் நகல், வங்கி பாஸ் புக் நகல் உள்ளிட்டவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கி இத்திட்டத்தில் பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.