சாலையோர குழந்தைகளின் பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோர குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடந்தது. புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சாலையோர குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பார்கவி தலைமையில் நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் தர்மேந்திரன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோர குழந்தைகளை கண்டறிந்து எதற்காக அவர்கள் அங்கு வசிக்கின்றனர் என்று கேட்டறிந்தனர். இக்குழுவினர் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டும், வழித்தவறி வந்த குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வருகின்றனர். வீடு மற்றும் பெற்றோர் இல்லாமல் யாசகம் எடுக்கும் குழந்தைகளை மீட்டு நலக்குழுமத்தில் ஒப்படைத்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருடன் இருந்த குழந்தைகளை படிக்க அறிவுறுத்தினர்.