கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
செஞ்சி : அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பெரியாயி கோவில் அருகே கெங்கை அம்மன் சன்னதி தனியாக உள்ளது. இந்த கெங்கையம்மனுக்கு ஆடி மாதத்தில் சாகை வார்த்தல் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்தாண்டு சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கெங்கையம்மன் மற்றும் மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். ஏழு வம்சாவழி பூசாரிகள் குடும்பத்தினர் கெங்கையம்மன் சன்னதியில் பொங்கல் வைத்தனர். மாலையில் அக்னி குளத்தில் இருந்து பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தின் முடிவில் அம்மன் கோவிலில் பொது மக்களுக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.