தீபாவளி பண்டிகையால் பயணிகள் அதிகரிப்பு விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு
விழுப்புரம்: தீபாவளி பண்டிகையின் போது, ரயில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக, விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையின் போது, ரயில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக, திருச்சி கோட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட வரிசை முறையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகள் நெரிசலை தவிர்த்து, போக்குவரத்தை சீரமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு சீரான மற்றும் ஒழுங்கான ஏறுதல், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்) மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பிளாட்பார பகுதிகளில் பயணிகளுக்கு உதவிட, கூடுதல் ஊழியர்கள் மற்றும் தகவல் மற்றும் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பொது முகவரி அமைப்புகள், தெளிவான பலகைகள், தடுப்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யாத பயணிகளை, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்து இறக்கி, பொருத்தமான பொது பெட்டிகளுக்கு மாற்றி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில், நிலைய மேலாளர் ரகுராம் மராண்டி மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நிலைய துணை வணிக மேலாளர் ரோஸ்லின் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.