கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை
செஞ்சி அடுத்த செம்மேடு பகுதியில் உள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தொடர்ந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு சிறப்பான சேவை வழங்க கரும்பு துறையை ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயலாக்கம் என மூன்று தனித்தனி துறைகளாக அமைத்து சாகுபடி செலவுகளை குறைத்து மகசூலை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நீடித்த நிலையான கரும்பு சாகுபடியின் மூலம் கூடுதல் மகசூல் மற்றும் லாபம் பெற இயற்கை வளத்தை சரியான முறையில் கையாளுதல் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் போன்ற பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி கையேடுகள், சொட்டு நீர்பாசன கையேடுகள் பாதுகாப்பு குறித்த கையேடுகள் மற்றும் பல நவீன விரிவாக்க யுகதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின் மூலம் சிறந்த கரும்பு ரகங்கள் மற்றும் திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் வீரியமான நாற்றங்கால் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தரமான விதைக்கரணைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. கரும்பில் மிகச்சிறந்த முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி. டெட்ரா குளவி ஒட்டுண்ணி பூச்சிகள், இனக்கவர்ச்சி பொறி, போன்றவைகள் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். கரும்பில் செலவினங்களைக் குறைத்து மகசூலை அதிகப்படுத்தும் நோக்கில் நிலத்தை ஆழ உழுவதற்கும், இடை உழவு செய்வதற்கும். கட்டை கரும்பு நிர்வாகத்திற்கும் மற்றும் கரும்பு அறுவடைக்கும் சேவையாளர்கள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. வறட்சியை சமாளித்து மண் வளத்தைப் பெருக்க தோகை பொடியாக்குதல், நீர் மேலாண்மை உத்திகளாக தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் கருவிகளை பயன்படுத்துதலை விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. கரும்பு செயலாக்கப்பிரிவு கரும்பு நடவு செய்வது முதல் அறுவடை வரை விவசாயிகளுக்கு பலதரப்பட்ட சிறந்த சேவைகளை செய்து வருகிறது.