உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  110 ஆண்டுகளாக ஐந்தாம் தலைமுறை பயிலும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

 110 ஆண்டுகளாக ஐந்தாம் தலைமுறை பயிலும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

செஞ்சி காந்தி பஜாரில் அழகுற கம்பீரமாக நுாற்றாண்டுகளைக் கடந்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நகரின் இதயமாகவும், மக்களின் அங்கமாகவும் திகழ்கிறது. செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1880ம் ஆண்டில் கூரை கொட்டகையில் ஆரம்பப்பள்ளியாக துவங்கப்பட்டது. பெரிய வளாகம், மாணவர்கள் பயில 2 கூரை கொட்டகை வகுப்பறை, குடிநீர் பருக பெரிய கிணறு, காய்கனிகள், பூக்கள் கொண்ட சிறிய தோட்டம் இப்படி துவங்கிய இப்பள்ளி இன்று பல ஆயிரம் மாணவர்களை உருவாக்கி நகரின் அடையாளமாகவும், செஞ்சி வட்டாரத்திற்கே அரும்பெரும் பொக்கிஷமாகவும் உள்ளது. 145 ஆண்டுகளுக்கு முன் செஞ்சி பகுதியில் பள்ளி என்பதற்கு அடையாளமாக இந்த பள்ளி இருந்துள்ளது. 1915ம் ஆண்டு சுப்புராயலு ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது, பேரூராட்சி தலைவராக இருந்த வரதநயினார் காலத்தில் பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டு துவக்கப் பள்ளியாக திறந்தனர். பின்னர் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1954 முதல் 1963ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த காமராஜர், இப்பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று கொடியேற்றிய பெருமைக்குரிய பள்ளியாக உள்ளது. செஞ்சி நகர மக்களுக்கு கல்வி தந்த பள்ளி. இப்பள்ளியில் படிக்காத குடும்பத்தினர் யாரும் இல்லை எனும் அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் இந்த பள்ளி ஒவ்வொரு குடும்பங்களின் அங்கமாக திகழ்கிறது. சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் இங்கிருந்து வந்தவர்கள். இங்கு படித்தவர்கள் பதவி உயர்வு பெற்று மாவட்ட அளவில் உயர் பதவியிலும், மாவட்ட கல்வி அலுவலர்களாக, எல்லை பாதுகாப்பு பணி அலுவலர்கள், வீரர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை, கலைத்துறை, பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். ஒரே ஒரு பள்ளியாக இருந்த செஞ்சி இப்போது எத்தனையோ பள்ளிகள் வந்த பின்னரும் இதன் தனித்தன்மையை இழக்காமல் வகுப்பறைகள் நிரம்பும் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை இருந்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த பள்ளி ஒரு பெரிய பொக்கிஷம். கல்வி மட்டுமின்றி ஒழுக்கத்திற்கும் இந்த பள்ளி எடுத்துக்காட்டு. இங்கு பணிபுரிந்து, இப்போது பணிபுரியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் எப்போதும் தரமான கல்வியுடன், தரமான மாணவர்களை செஞ்சி மண்ணிற்கு தந்து கொண்டிருக்கிறது. கல்விக்கு மட்டுமின்றி பள்ளி அரசு விழா, இலக்கிய விழா, மருத்துவ முகாம்கள், கருத்தரங்கம் உள்ளிட்டவைகளுக்கான கலை அரங்கமாக திகழ்ந்து வருகிறது. பள்ளியின் வளர்ச்சியில் எம்.எல்.ஏ., மஸ்தான் தனி கவனம் செலுத்தி வருகிறார். 1986 ஆண்டு பேரூராட்சி சேர்மனாக பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் பள்ளியின் தேவைகளை நிறைவு செய்து வருகிறார். பொதுப்பணித்துறை மூலம் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளில் ஆழ் துளை கிணறு, குடிநீர் வசதி, நான்கு வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர், அங்கன்வாடி கட்டடம், கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். 110 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த பள்ளி தாத்தா முதல் எள்ளு பேரன் வரை படித்து வரும் ஐந்தாம் தலைமுறை பள்ளியாகவும், இதுவரை ஒரு லட்சம் மாணவர்கள் படித்துச் சென்ற நடுநிலைப் பள்ளி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ