உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நுாறு ஆண்டுகள் பழமையான கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி அர்ப்பணிப்பு ஆசிரியர்களால் விளையாட்டு, படிப்பில் சாதிக்கும் மாணவர்கள்

 நுாறு ஆண்டுகள் பழமையான கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி அர்ப்பணிப்பு ஆசிரியர்களால் விளையாட்டு, படிப்பில் சாதிக்கும் மாணவர்கள்

நுாறு ஆண்டுகள் பழமையான கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர்களால் விளையாட்டு மற்றும் படிப்பில் மாணவர்கள் சாதித்து வருகின்றனர். மேல்மலையனுார் தாலுகா, கோட்டப்பூண்டி கிராமத்தில் கடந்த 1924ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியாக இருந்து, கடந்த 1985ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2009ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

Galleryமொத்தம் 7 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளியில், கோட்டப்பூண்டி, கப்ளாம்பாடி, கீரந்தப்பட்டு, சங்கிலிகுப்பம், எய்யில், சான்றோர் தோப்பு, செக்கடிக்குப்பம், சிந்திப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 442 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியராக சங்கர் மற்றும் 22 ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியில் 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு நடந்த மாநில அளவிலான அத்லெட்டிக் போட்டிகளில் ஓட்டப் பந்தயம் மற்றும் கோகோ போட்டிகளில் பங்கேற்றனர். மேலும், மாநில அளவில் திருச்சியில் நடந்த திருக்குறள் வினாடி வினா போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். அதுமட்டுமின்றி முதலமைச்சரின் தமிழ் திறனறி தேர்வில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருவதுடன் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மேலும், பள்ளியில் என்.எஸ்.எஸ்., ஜெ.ஆர்.சி., பசுமைப்படை போன்ற அமைப்புகளில் மாணவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று முகாமிட்டு சேவை புரிந்து வருகின்றனர். தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உறுதுணையாக உள்ளனர். இப்பள்ளியில், கடந்த 2000-2001ம் ஆண்டில் 10ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு கூட்டம், கடந்த 24ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்தது. இதில் பழைய மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியர்களை கவுரவித்து , நினைவு பரிசு வழங்கியதுடன் அவர்களிடம் ஆசி பெற்றனர். அப்போது, ஆசிரியர்கள் பாடம் நடத்திய விதம், மாணவர்களின் சேட்டைகள் குறித்து பலரும் நினைவு கூர்ந்து பேசினர். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இப்பள்ளிக்கு, ஆய்வக கட்டடம், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சங்கர், ஆசிரியர்கள் தாசன், ராமசாமி, முனுசாமி, ராஜேந்திரன், முனுசாமி, அரசு, வெங்கடேஷ், முருகையன், கருணாநிதி, பங்கேற்றனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் பிரபு, லோகநாதன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து மதிய உணவு விருந்துடன், கேக் வெட்டி கொண்டாடினர்.

வாழ்நாள் முழுதும் நீடிக்கும்

பள்ளி காலத்து நினைவுகள்

நான், இந்த பள்ளியில்தான் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்று, ஐ.டி.ஐ., படித்து முடித்தேன். தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறேன். இதற்கு காரணம் எங்களது ஆசியர்கள் சிறந்த முறையில் பாடம் நடத்தி, கல்வி அறிவு பெற வழி வகுத்ததுதான். கவனமுடன் கல்வி பயின்று, அரசு பணியில் உள்ளேன். பள்ளி காலத்து நினைவுகள் வாழ்நாள் முழுதும் நீடிக்கும். இப்பள்ளி மேன்மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக இருப்போம். - பிரபு, அரசு பஸ் டிரைவர் கோட்டப்பூண்டி

என் வாழ்க்கைக்கு

அடித்தளமிட்ட பள்ளி கடந்த 2001ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தேன். தொடர்ந்து பிளஸ் 2 வரை பயின்று தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எங்களது பள்ளி விளையாட்டு மைதானத்தில், சக மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிய நினைவுகள் மறக்க முடியாத அனுபவம். இன்று வரை எனது பள்ளிப் படிப்பு நினைவுகள் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய அடித்தளமிட்ட எனது பள்ளியை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், நிறைய சாதித்து, வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். - சங்கர், அரசு பஸ் டிரைவர் சிந்திப்பட்டு,

பள்ளி வளர்ச்சிக்கு

பாட்டுபட்டு வருகிறேன்

நான், பி.எஸ்சி., பட்டப் படிப்பு முடிக்க காரணம், இந்தப் பள்ளி ஆசிரியர்கள்தான். எனது ஆசான்கள் அளித்த ஊக்கத்தால் பட்டப்படிப்பு முடித்து, சமூக சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இதனால், இப்பள்ளியின் வளர்ச்சிக்காக சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன். 25 ஆண்டுளுக்கு முன் இப்பள்ளியில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது, மனமகிழ்ச்சியை தந்துள்ளது. 'தினமலர்' நாளிதழில் வாரம்தோறும் வெளியாகின்ற 'நம்ம ஊரு பள்ளி, நம்ம வாத்தியார்' பகுதி பள்ளி கால நினைவுகளை போற்றும் வரலாற்று பெட்டகமாக அமைந்துள்ளது. - சதீஷ், சமூக ஆர்வலர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கோட்டபூண்டி

அர்ப்பணிப்புடன்

பணிபுரியும் ஆசிரியர்கள்

கோட்டப்பூண்டி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை பயின்றேன். தொடர்ந்து எலக்ரிக்கல் டிப்ளமோ கோர்ஸ் (இ.இ.இ.) படித்து முடித்தேன். நான் பயின்ற பள்ளி, இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ளது. பள்ளி வளாகம், கல்வி கற்க அமைதியான இடமாகவும், விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளடக்கி அமைந்துள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள், கல்வி, மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிட ஏற்ற வகையில் உள்ளது. எங்களது பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்தி திறமையான மாணவர்களை உருவாக்கியுள்ளனர். -லோகநாதன், எலக்ட்ரீசியன் கோட்டபூண்டி

பள்ளியையும், ஆசிரியர்களையும்

நினைவு கூறும் தினமலருக்கு நன்றி

கோட்டப்பூண்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்றேன். என் வாழ்க்கைக்கு வித்திட்ட பள்ளி என்றால் மிகையாகாது. தொடர்ந்து, எம்.எஸ்சி., - பி.எட், படித்து முடித்தேன். தற்போது அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உயர்ந்துள்ளேன். எங்கள் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறையுடன் பாடம் நடத்தினர். கடந்த 1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையில், கோட்டப்பூண்டியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி, அவர்களது வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். பள்ளியையும், ஆசிரியர்களையும் நினைவு கூற வைக்கும் 'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். - முருகையன், புதுபாலப்பட்டு அரசு பள்ளி முதுநிலை கணித ஆசிரியர் சிந்திப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை