விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி, மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் குவிக்கப்பட்டனர். விழுப்புரம் அருகே கண்டமானடிக்கு செல்லும் சாலையில், ஜானகிபுரத்தில் உள்ள ரயில்வே கேட், திடீரென கடந்த மாதம் 22ம் தேதி மூடப்பட்டது. மாற்றாக, புதிய நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக, 5 கி.மீ சுற்றி, செல்ல அறிவுறுத்தப்பட்டது.இதனை எதிர்த்து, கண்டமானடி, ஜானகிபுரம், கண்டம்பாக்கம் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மேம்பாலம் வழியாக ஆபத்தான வகையில், சுற்றுப்பகுதி மக்கள், மாணவர்கள் சாலையை கடந்து செல்லும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.கண்டமானடியில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனைக்காக தினசரி 10 கிராமத்தினர், மாணவர்கள் செல்ல வேண்டும், இதனால், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்றனர். விழுப்புரம் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, ரயில்வே அதிகாரியிடம் பேசியுள்ளதால், 2 நாளில் ரயில்வே கேட் திறக்கப்படும் என உறுதியளித்து சென்றனர். ஆனால், ஒரு வாரமாகியும் திறக்கப்படாததால், அந்த கிராம மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை பேனர் வைத்தனர்.இதனையடுத்து, அறவழி போராட்டத்துக்கு செவிசாய்க்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, கண்டமானடி, கண்டம்பாக்கம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் சார்பாக, ஏப்.3ம் தேதி ஜானகிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும், திருச்சி மார்க்க எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத் ரயில்களை மறிப்போம் என அறிவித்து, நோட்டீஸ் ஒட்டினர்.இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் ரயில்வே டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், ரயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப் போலீசார் 200 பேர் நேற்று காலை 6 மணிக்கு குவிக்கப்பட்டனர். ரயிலை மறித்தால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து, ரயில்வே கேட் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றனர். இதனையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு, கண்டமானடி ஊராட்சித் தலைவர் ஏழுமலை, துணை தலைவர் ராஜா, அரியலூர் துணை தலைவர் வினோத், கவுன்சிலர் ஆதிலட்சுமி காசிநாதன், கண்டம்பாக்கம் தலைவர் தனசேகர், மரகதபுரம் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் தலைமையில் அப்பகுதி மக்கள் கோவிலில் திரண்டனர்.விழுப்புரம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், டி.எஸ்.பி.,க்கள், ரயில்வே அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: இங்கு மூடப்பட்ட கேட்டை திறக்க கலெக்டர், ரயில்வே அதிகாரிகளிடம் பேசியுள்ளார். சிக்னல் பிரச்னை போன்றவைக்காக, ரயில்வே போர்டுக்கு போய் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனால், அந்த இடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு, ரயில்வே அனுமதி பெற்று, நகாய் அல்லது நெடுஞ்சாலைத்துறை நிதியில், சப்வே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை போலீசாரை நியமித்து, ரயில்பாதையை கடக்கும் மாணவர்களை, கண்காணித்து அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.