வங்கியில் திடீர் தீ விபத்து விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐ.ஓ.பி., வங்கியில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் நேருஜி சாலையில், வீரவாழி மாரியம்மன் கோவில் அருகே ஐ.ஓ.பி., வங்கி கிளை உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வங்கியில் இருந்து திடீரென புகை வந்ததை கண்டு, அங்கிருந்த சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். வங்கி கதவு பூட்டியிருந்ததால் அருகே உள்ள கட்டட பகுதி வழியாக தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வங்கியின் இருபுறமும் மிகப்பெரிய கட்டடங்கள் இருந்ததால், உள்ளே நுழைய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தீயணைப்பு துறையினர் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து முன்பக்க கதவை திறந்த பிறகு, உள்ளே சென்றனர். அப்போது வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உள்ளே இருந்த ஏ.சி., பகுதியில் தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு வீரர்கள் உடனே அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், வங்கியில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. வங்கியில் இருந்த ஏ.சி., ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பிடித்து, அந்த சாதனம் முழுவதும் எரிந்து போனதோடு, அதனருகே இருந்த சில பொருள்களும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.