உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.8 கோடியில் சீரமைக்கப்பட்ட கால்வாய்... வீண்; பொதுமக்கள் அலட்சியத்தால் மீண்டும் துார்ந்தது

ரூ.8 கோடியில் சீரமைக்கப்பட்ட கால்வாய்... வீண்; பொதுமக்கள் அலட்சியத்தால் மீண்டும் துார்ந்தது

விழுப்புரம்: விழுப்புரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட கோலியனுாரான் வாய்க்கால் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் பொறுப்பற்ற செயலாலும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்துள்ளது.விழுப்புரம் நகரில் உள்ள பெரிய வாய்க்கால்களில் செல்லும் கழிவுநீர் அனைத்தும் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், தாமரைக்குளம் வழியாக சாலை அகரம், கோலியனுார் வரை சென்றடைகிறது. இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அடைத்து கொள்வதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இரவில் கொசு தொல்லையால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், விழுப்புரம் நகராட்சி, நபார்டு வங்கி உதவியோடு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெளிமேடு கிராமத்தில் துவங்கி, விழுப்புரம் வழியாக கோலியனுார் வரை, கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணி கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. 3 கி.மீ., துாரத்திற்கு 5 கல்வெர்ட்டுகள், 2 கி.மீ., துாரத்திற்கு 2.50 மீட்டர் அகலத்தில் 5 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி 2022ம் ஆண்டு முடிந்தது.இதில், தெளிமேடு கிராமத்தில் தலைப்பு மதகு அமைக்கப்பட்டு, இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரியும் தண்ணீர் இங்கு சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் வெளியேறும் மாசு படிந்த நீரை பிரித்து, கழிவுநீர் கால்வாய்க்கு அனுப்பபட்டது.இதையடுத்து, இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் தடையின்றி சென்றது. அதிகாரிகள் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மீண்டும் துார்ந்து பழைய நிலைக்கு மாறியது.நகராட்சி அதிகாரிகள் மாதம் ஒரு முறை கூட கோலியனுாரான் வாய்க்காலில் கழிவுநீர் தேங்காமல் செல்கிறதா என்பதை கள ஆய்வு செய்வதில்லை. மேலும், விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள பொதுமக்களும், வணிகர்களும் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதால் தங்களுக்கு தான் பாதிப்பு என்பதைக் கூட உணர்வதில்லை.பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கொண்டு, கீழே இறங்கி வந்து வீதிகளில் உள்ள குப்பை தொட்டி, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கொண்டு வரும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் போட முடியாமல், மேலிருந்து கீழே செல்லும் கால்வாயில் வீசுகின்றனர்.வியாபாரிகளும் தங்களின் குப்பைகளை கால்வாயில் வீசுகின்றனர். அதே போல், பொதுமக்கள் வாட்டர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை கால்வாயில் வீசுகின்றனர். இதனால், கால்வாயில் குப்பைகள் அடைத்து கொண்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி, துர்நாற்றம், கொசு தொல்லை ஏற்படுகிறது.அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் தான், கோலியனுாரான் வாய்க்காலில் உள்ள கழிவுநீர் தேக்கம் பிரச்னை தொடர்ந்து ஏற்படாமல் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை