உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி துவங்கியது

முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி துவங்கியது

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடங்கிய முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஏராளமான மாணவர்கள் அசத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப்பிடித்து வெற்றி பெறுவோருக்கு பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். முதல் கட்டமாக குழு போட்டியில், கபடி போட்டி நடந்தது. இதனையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு விழுப்புரம் பெருந்திட்ட வளாக அரசு விளையாட்டு மைய நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் போட்டி துவங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தொடங்கி வைத்தார். நீச்சல் பயிற்சியாளர்கள், தேர்வு குழுவினர் போட்டிகளை நடத்தினர். முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கான போட்டி நடந்தது. இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து நிலை பள்ளி மாணவ, மணவியர்கள் 120 பேர் பங்கேற்றனர். இதில், பிரீ ஸ்டைல், பேக் ஸ்டோக், பிரண்ட் ஸ்டோக், பட்டர் பிளை, தனி நபர் நீச்சல் என 10 வகையான போட்டிகள் நடந்தது. இப்போட்டியின் நிறைவாக ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தோருக்கு 3,000 ரூபாய், இரண்டாமிடத்திற்கு 2,000 ரூபாய், மூன்றாமிடத்திற்கு 1,000 ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழையும் சி.இ.ஓ., அறிவழகன் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நாளை 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் கல்லுாரி மாணவர்களுக்கும், 5ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் நீச்சல் போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை