உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவல் நிலையங்களில் போதிய போலீசாரின்றி... தவிப்பு; ஸ்டேஷன் எல்லைகளை பிரிக்க வலியுறுத்தல்

காவல் நிலையங்களில் போதிய போலீசாரின்றி... தவிப்பு; ஸ்டேஷன் எல்லைகளை பிரிக்க வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நீண்டகாலமாக காவல் நிலையங்களின் எல்லை பிரிக்காமலும், போதிய போலீசார் நியமிக்காததால், பாதுகாப்பு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், அதிக கிராமப்பகுதிகளுடன், பெரிய மாவட்டமாக இருந்ததால், கடந்த 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஆனாலும், காவல் துறை பாதுகாப்பு மற்றும் நிர்வாக பணிக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகள் பிரிக்கப்படாமலும், போதிய போலீசார் நியமிக்காமல் உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.விழுப்புரத்தில் அண்மையில் காவல் உட்கோட்டம் பிரிக்கப்பட்டாலும், போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகள் பிரிக்காமல், நீண்ட தொலைவு, பல கிராமங்களைக்கொண்டு இயங்குவதால், போலீசாருக்கு பணிச்சுமையும், பாதுகாப்பு பணியில் தொய்வும் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக தலைநகரான விழுப்புரத்தில், ஆரம்ப காலத்தில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன், டவுன் போலீஸ் ஸ்டேஷன், மேற்கு போலீஸ் டேஷன் என 3 ஸ்டேஷன் மட்டுமே தொடர்கிறது. பன்மடங்கு மக்கள் தொகை பெருகிய நிலையில், இதற்கான எல்லைகள் பிரிக்காமல், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அதிகளவிலும், சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கு குறைந்தளவிலும் ஏரியாக்கள் உள்ளது.விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் அமைந்துள்ளது. விழுப்புரம் தாலுகாவை சுற்றியுள்ள 75 கிராமங்களுக்கு இந்த ஸ்டேஷன் தான் உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்களும், 20 போலீசார் மட்டுமே உள்ளனர். இந்த கிராமங்களும், விழுப்புரம் நகரின் பெரும்பகுதியையும் இதன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.மேலும், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் போன்றவையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளதால், தினசரி ஆர்ப்பாட்டம், போராட்டம், உயரதிகாரிகள் வருகை என இதற்கே கவனிக்க ஆளின்றி போலீசார் திணறு கின்றனர். நகர காவல் நிலையம், மேற்கு காவல் நிலையங்களுக்கு நகரில் உள்ள பாதி வார்டுகள் தான் வருகிறது.இதனால், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியை பிரித்து, நகர, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் சேர்க்க வேண்டும். கலெக்டர் வளாகம் பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறை வேறாமல் உள்ளது.இதே போல், புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கண்டமங்கலம், வளவனுார் காவல் நிலையங்களுக்கும் தலா 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எல்லை பகுதி என்பதால், நீண்ட தொலைவில் கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால், சாராயம், போதை பொருள் கடத்தல் தடுப்பில் தொய்வு ஏற்படுகிறது.இந்த இரண்டு போலீஸ் ஸ்டேஷன் பகுதியை பிரித்து, பாக்கம் கூட்ரோடு பகுதியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அல்லது புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்துள்ளது. விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீராமல் நீண்டகாலமாக தொடர்கிறது. விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், மிக குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பணியாற்றி வருவதால், போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.இதே போல், மாவட்டம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் எல்லைகள் பிரிக்கவும் அதற்கு ஏற்றாற்போல், கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ