இன்று இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு டி.ஐ.ஜி., மேற்பார்வையில் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி எழுத்து தேர்வு இன்று 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சரக டி.ஐ.ஜி., உமா மேற்பார்வையில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் தினகரன், இளமுருகன் உட்பட டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அமைச்சு பணியாளர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், 8 தேர்வு மையங்களில் இன்று 9ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு அறை காவலர், தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அவர்களின் பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், எழுத்து தேர்வு பணியில் ஈடுபடும் காவலர்கள் காலை 6:00 மணிக்கு அந்தந்த தேர்வு மையத்திற்கு அறிக்கை செய்யவும், தேர்வுக்கு வரும் தேர்வாளர்கள் முறையாக சோதனை செய்த பின், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்விற்கு வரும் தேர்வாளர்கள் மொபைல், ப்ளூடூத், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. 9.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் மையத்திற்குள் செல்ல அனுமதிக்க கூடாது. தேர்வு அறைக்குள் தேர்வாளர்கள் அனுமதிக்கும் போது, கருப்பு பந்துமுனை பேனா, ஹால்டிக்கெட், அடையாள அட்டையோடு உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.