செஞ்சி: ராஜாம்புலியூர் டோல்கேட்டிற்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய, 66.69 லட்சம் ரூபாய் கட்டண பாக்கியால், நேற்று அரசு பஸ்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டதால், பயணியர் பாதிக்கப்பட்டனர். செஞ்சி - திண்டிவனம் சாலையில், ராஜாம்புலியூரில் டோல்கேட் உள்ளது. இந்த வழியாக சென்னை, புதுச்சேரிக்கு திருவண்ணாமலை, செஞ்சி, மேல்மலையனுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அரசு பஸ்கள் செல்கின்றன. க டந்த ஜூலை முதல் அக்டோபர் வரையில், விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை பணிமனைகள் சார்பில் டோல்கேட்டிற்கு, 66 லட்சத்து 69,581 ரூபாய் பாக்கி உள்ளது. இதனால், 10 நாட்களுக்கு முன் இந்த டோல்கேட்டில் அரசு பஸ்களை அனுமதிக்க மறுத்தனர். அப்போது, செஞ்சி பணிமனை மேலாளர் சுரேஷ், 'விரைவில் பணம் செலுத்தப்படும்' என, டோல்கேட் அதிகாரிகளிடம் உறுதியளித்தார். இதனால் அப்போது பஸ்களை அனுமதித்தனர். இதன் பிறகும் பணம் செலுத்தாததால், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் அரசு பஸ்களை ராஜாம்புலியூர் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தினர். செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, இரவில் பயணியர் பாதிக்கக் கூடாது எனக்கூறி, பஸ்களை விடுவித்தார். இதனால், நேற்று காலை, 10.20 மணியளவில் மீண்டும் அரசு பஸ்களை தடுத்து நிறுத்தினர். இரண்டு பக்கமும், 15க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் காத்திருந்தன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேச்சு நடத்த யாரும் வரவில்லை. அரை மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்த பயணியர் டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால், ஊழியர்கள் பஸ்களை அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் தரப்பில், 'இந்த டோல்கேட் வழியாக தினமும் செல்லும் ரூட் பஸ்களுக்கு மாதந்திர கட்டண விகிதத்தில் பணம் செலுத்தி வருகிறோம். 'இந்த பஸ்களுக்கும் சேர்த்து கட்டணம் விதித்துள்ளனர். இதனால் கட்ட வேண்டிய தொகையில் முரண்பாடு உள்ளது. 15 தினங்களுக்குள் பாக்கியை செலுத்தி விடுவோம்' என, தெரிவிக்கப்பட்டது.