இ-நாம் பரிவர்த்தனையால் வியாபாரிகள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி கமிட்டிகளில் 9,578 மூட்டை விளை பொருட்கள் தேக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில், இ-நாம் திட்ட புதிய பண பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், கொள்முதல் செய்யாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் 9,578 மூட்டை விளைபொருட்கள் தேக்கமடைந்தன. தமிழக மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டத்தில், விவசாய விளைபொருட்களை, வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர். இங்கு கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான தொகையை மார்க்கெட் கமிட்டி மெய்நிகர் வங்கி கணக்கிற்கு, வியாபாரிகள் அனுப்புகின்றனர். அதன்பின், அந்த தொகையை, மார்க்கெட் கமிட்டி அலுவலர்கள், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தில் கொள்முதல் பொருட்களுக்கான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு, வியாபாரிகள் நேரடியாக அனுப்ப வேண்டும் என வேளாண் துறை சார்பில் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் கமிட்டிகளில் நேற்று 30ம் தேதி முதல் வியாபாரிகள், விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். அதன்படி, நேற்று விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை, வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை. இதனால், மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் கொண்டுவந்த விளைபொருட்கள் தேக்கமடைந்தன. காலையில் இருந்து காத்திருந்த விவசாயிகள் அந்தந்த மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் செய்யப்படாததால் செய்வதறியாது தவித்தனர். சாலை மறியல் விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில், விளை பொருட்கள் கொள்முதல் செய்யாதை கண்டித்து, விவசாயிகள் காலை 9:40 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர். பின், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் 10:10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 10:15 மணிக்கு கலைந்து சென்றனர். அப்போது, வண்டிப்பாளையத்தை சேர்ந்த வசந்தா, 60; என்பவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மார்க்கெட் கமிட்டிகளில் விளைபொருட்கள் மூட்டைகளை இறக்கி வைத்தனர். விவசாயிகளின் மொபைல் எண்களை மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சார்பில் வாங்கிக்கொண்டு, பொருட்கள் கொள்முதல் குறித்த தகவல் தெரிவிப்பதாக கூறினர். இதை தொடர்ந்து, விவசாயிகள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். வியாபாரிகள் ஸ்டிரைக்கால், செஞ்சி கமிட்டியில் 2000 நெல் மூட்டைகள், அரகண்டநல்லுாரில் 1000 நெல் உட்பட 1,800 மூட்டைகள், அவலுார்பேட்டையில் 2,500 நெல் மூட்டைகள், 100 மணிலா மூட்டைகள் மற்றும் திருவெண்ணெய்நல்லுாரில் 700 நெல் மூட்டைகள், விக்கிரவாண்டியில் 150 நெல் உட்பட 345 மூட்டைகள், விழுப்புரத்தில் 200 நெல் உட்பட 483 மூட்டைகள் என 317 விவசாயிகள் கொண்டுவந்த 7,928 மூட்டைகள் தேக்கமடைந்தன. இதேபோன்று, கள்ளக்குறிச்சியில் 40 மக்காச்சோளம் மூட்டைகள், 10 எள் மூட்டைகள் மற்றும் உளுந்துார்பேட்டையில் 650 நெல் உட்பட 773 மூட்டைகள், சங்கராபுரத்தில் 200 மக்காச்சோளம் மூட்டைகள், 100 நெல் மூட்டைகள், தியாகதுருகத்தில் 500 நெல் மற்றும் 2 மக்காச்சோளம் மூட்டைகள், மணலுார்பேட்டையில் 15 நெல், 10 மக்காச்சோளம் மூட்டைகள் என 94 விவசாயிகள் கொண்டுவந்த 1,650 மூட்டைகள் தேக்கமடைந்தன. இதனால் மொத்தம் 9,578 மூட்டைகள் தேக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது.