| ADDED : டிச 10, 2025 06:35 AM
விழுப்புரம்: திருவக்கரை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, பஸ் வசதி செய்துதர வேண்டும் என த.வெ.க., வினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். த.வெ.க., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பிரவீன்ராஜ், மணிமாறன் உள்ளிட்ட கட்சியினர், அளித்த மனு: திருவக்கரை கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. அருகே 3 கி.மீ., தொலைவில் செங்கமேடு, கடகம்பட்டு, சேனிப்பேட்டை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு நிரந்தர போக்குவரத்து வசதியின்றி, பொது மக்கள், மாணவர்கள், திருவக்கரை பகுதிக்கு நீண்ட துாரம் நடந்து வருகின்றனர். தேர்வு காலங்களில் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பொது மக்களும், மருத்துவம், வங்கி, சந்தைகளுக்கு வெளியூர்களுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். திருவக்கரையில் உள்ள தேசிய கல்மரப்பூங்கா நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். ஆனால், திருவக்கரை பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதியின்றி உள்ளதால், சுற்றுலா பயணிகளும் நேரடியாக வந்து செல்ல முடியாமல் போகிறது. இதனால், திருவக்கரை பகுதிக்கு பஸ்களை இயக்கி போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.