4ம் தேதி வைணவ ஆன்மிக பயண ஏற்பாடு
விழுப்புரம்; ஹிந்து அறநிலையத் துறை சார்பில், புரட்டாசி மாதத்தையொட்டி புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு, 2 ஆயிரம் பக்தர்களை இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர்- மயிலாடுதுறை, திருச்சி, மதுரை ஆகிய மண்டல அலுவலகங்கள் மூலம் தலா 70 பக்தர்கள், திருநெல்வேலி- துாத்துக்குடி மண்டலத்தின் மூலம், 80 பக்தர்கள் உட்பட 500 பேர் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட பதிவு செய்த 70 பக்தர்கள், வரும், 4 ம் தேதி காலை விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்கின்றனர். பின், அங்கிருந்து சுற்றுலா பஸ் மூலம் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவில், பூவரசங்குப்பம் மற்றும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.