ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
செஞ்சி: பட்டா பெயர் மாற்றம் செய்ய, ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 33; இவர், தனது தாத்தா தானமாக கொடுத்த நிலத்தை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர, கடந்த செப்., 26ம் தேதி செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்த மனு வரிக்கல், மேல்அருங்குணம் பகுதி வி.ஏ.ஓ., தேவராஜ், 45; என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. அவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய கோகுலகிருஷ்ணனிடம், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் நேற்று காலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனை படி நேற்று பகல் 12:20 மணியளவில் வரிக்கல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தேவராஜிடம், கோகுலகிருஷ்ணன் ரூ.10,000 ஆயிரம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் தேவராஜை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.