மதகடிப்பட்டு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
திருபுவனை: விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் விரிசல் அடைந்த திருவாண்டார்கோயில் மற்றும் மதகடிப்பட்டு மேம்பால இணைப்புச்சாலையில் பொக்லைன் மூலம் தோண்டி பராமரிப்ப பணி நடை பெறுவதால் மேம்பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரத்தில் துவங்கி எம்.என் குப்பம்வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் கண்டமங்கலம் ரயில்வே மேம்பால இறுதிகட்ட பணிக்காக புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குரவத்து தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், கடந்த தீபாவளிக்கு முன்பு கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் தெற்கே உள்ள சாலையில் வாகன போக்குவரத்து துவங்கியது.இந்நிலையில் திருவாண்டார்கோயில் மேம்பாலத்தின் இணைப்புச் சாலை உள்வாங்கி விரிசல் அடைந்தது. இதையடுத்து கடந்த 7ம் தேதி பாலத்தின் வலது பக்க இணைப்புச் சாலை ராட்சத பொக்லைன் மூலம் தோண்டி சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் பாலத்தின் வலதுபக்க சாலையில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, புதுச்சேரி செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியே திருப்பி விடப்பட்டது. குறுகிய சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேம்பாலத்திற்கு தெற்கே உள்ள இணைப்புச் சாலையும் தோண்டி சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இதனால், மேம்பாலத்தின் வழியே போக்குவரத்துக்கு நேற்று முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. இதனால், நேற்று காலை முதல் திருவாண்டார்கோயில் மேம்பால சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியுற்றனர்.அதேநேரத்தில், தினமும் போக்குரவத்து நெரிசலில் சிக்கிக் தவிக்கும் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மேம்பாலத்தின் தெற்கு பகுதி இணைப்புச் சாலை பராமரிப்பு பணிக்காக நேற்று காலை பொக்லைன் மூலம் தோண்டும் பணி துவங்கியுள்ளது. இதனால் மதகடிப்பட்டு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.