திண்டிவனம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு தடை: பழுதடைந்துள்ள பாலத்தில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்குகிறது
திண்டிவனம்: பழுதடைந்துள்ள திண்டிவனம் மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் துவங்குவதால், பாலத்தின் மேல் பகுதியிலுள்ள நான்கு வழிகளிலும் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.திண்டிவனம் மேம்பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாவ தால், மேம்பாலத்தை சீரமைப்பதற்காக ரூ.8.13 கோடி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பாலம் சீரமைப்பதற்கான பணிகள் துவங்கியது.இதில் பாலத்தின் மேல்பகுதியில் நான்கு மார்க்கமாக செல்லும் சாலைகளில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சாலைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து சீரமைக்கப்பட்டது.கடைசி கட்டமாக செஞ்சி செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது. கடந்த ஏப்., 13ம் தேதி மேம்பாலத்தின் மேல்பகுதியிலுள்ளநான்கு வழிகள் வழியாக போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில், மேம்பாலத்தின் மேல்பகுதியிலுள்ள நான்கு போக்குவரத்து சாலைகளிலும், போடப்பட்டுள்ள இணைப்புகள் (பேரிங்ஸ் ஜாயிண்ட்)சரியாக இல்லாமல் மேடு பள்ளமாக இருந்தது.இதனால் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள், ஸ்பீடு பிரேக்கர் உள்ள பகுதி போல் குதித்து குதித்து செல்லவேண்டியிருந்தது.இவ்வாறு குதித்து குதித்து செல்லும் வாகனங்களை மையப்படுத்தி சமூக வலைதளத்தில் கேலி செய்து வெளியான சம்பவம் நகர மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் பாலத்தின் மேல்பகுதி வழியாக கடந்துசெல்லும் பெரிய சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சிலர் பாலத்தின் மேல் செல்லாமல் பாதுகாப்பிற்காகபாலத்தின் கீழ்பகுதி வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.இதற்கிடையில் மேம்பாலம் கட்டி 23 ஆண்டுகள் ஆவதால் பாலத்தின் மேல்பகுதியிலுள்ள ரவுண் டானா பகுதியில், தாங்கி நிற்கும் துாண்கள் வலுவிழந்துவிட்டதாக, அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நெடுஞ் சாலைத்துறை சார்பில், மேம்பாலத்தின் மேல்பகுதியிலுள்ள நான்கு மார்க்க சாலைகளிலுள்ள ஜாயிண்ட் பகுதியை சீரமைக்கவும், மற்றும் ரவுண்ட்டானா பகுதியிலுள்ள துாண்களை சீரமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளது.இதற்காக 23ம் தேதி (இன்று) முதல் வரும் ஜன., 10ம் தேதி வரை மேம்பாலத்தின் மேல் உள்ள நான்கு வழிகளும் மூடப்படுகின்றது.இதனால் எந்த வாகனங் களும் பாலத்தின் மேல்பகுதியில் செல்ல முடியாது. பல்வேறு மார்க்கங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாகத்தான் செல்ல முடியும்.கிட்டதட்ட தொடர்ந்து 18 நாட்கள் மேம்பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கடும் அவதி
மேம்பாலத்தின் மேல்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ள நிலையில், நகர மக்கள் பயன்படுத்திய சாலைகள் சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் மழையால் சேதமடைந்த நாகலாபுரம் தரைப்பாலம், கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் ஆகியன முற்றிலும் பயன்படுத்தாத நிலை உள்ளது. இதேபோல் காவேரிப்பாக்கம் ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் ஊற்று நீர் நிரம்பியுள்ளதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் சீரமைப்பு பணிகள் முடியும் வரை நகர மக்கள் பல்வேறு வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.