| ADDED : ஜூலை 27, 2011 12:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் நகைகளை அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று காலை பழைய பஸ் நிலையம் முன்பு திடீர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு காலனியைச் சேர்ந்த பெரியசாமி,52 என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இவர் விழுப்புரம் பகுதியில் பல்வேறு நகை திருட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் கடந்தாண்டு சிந்தாமணியை சேர்ந்த சக்கரபாணியிடம் ஒரு சவரன் மோதிரம், விழுப்புரம் வில்லியம் லே-அவுட் முருகேசனிடம் 6 சவரன் நகை, சாலையம்பாளையம் புஷ்பநாதனிடம் ஒரு சவரன் நகைகளை அபேஸ் செய்தது தெரிய வந்தது.
மேலும் விழுப்புரம் வண்டிமேடு கலாவிடம் 9 சவரன் நகை, சந்தான கோபாலபுரம் கணபதியிடம் 4 சவரன் நகை, ஏமப்பேர் வேணுகோபாலிடம் 2 சவரன் நகை, சாம்பசிவரெட்டி பாளையம் வள்ளியிடம் ஒரு சவரன் நகை என பலரிடம் நகைகளை திருடியதும் தெரிய வந்தது. இவரிடமிருந்து 14 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மனோஜ்குமார் உத்தரவின்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.