| ADDED : ஆக 28, 2011 11:16 PM
விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரம் அருகே உள்ள அய்யங்கோவில்பட்டில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் விதவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கின்றனர். அடுத்த மாதம் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறியது முதல் மெகா சைஸ் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரித்து, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வழக்கமான பிளாஸ்ட் ஆப் பாரீசினை தவிர்த்து தற்போது பேப்பர் கூழினால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மூன்று அடி முதல் 17 அடி உயரம் வரை இந்தாண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. சிங்க வாகனம், மயில், மாடு, நந்தி, பாம்பு, அன்னம், மான் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் இந்தாண்டு புதுவிதமாக குழந்தை கிருஷ்ணர் வடிவிலான விநாயகர் சிலைகளும், மும்பை பகுதி தோற்றமுடைய புதிய விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர். சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து, அதற்கு வண்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிலைகள் தயாரிப்பு குறித்து அய்யங்கோவில்பட்டு அரிகிருஷ்ணன் கூறுகையில்,'கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சென்னை, புதுச்சேரி மட்டுமின்றி மும்பை, விஜயவாடா, கேரளா, பெங்களூரு, குண்டூர், நெல்லூர் பகுதிகளுக்கும் ஆர்டரின் பேரில் சிலைகளை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். ஆரம்ப விலை 1300 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு உள்ளது. கிருஷ்ணர் வடிவம், மும்பைவாசிகள் பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை புதியதாக வடிவமைத்துள்ளோம். சிலைகளை உருவாக்க ஆண்டு முழுவதும் பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். சிலைகள் மைதா மாவு கலந்த பேப்பர் கூழினால் தயாரித்துள்ளதால் எளிதில் கரைந்திடும் வகையில் உருவாக்கப்படுகிறது' என்றார். பழமையும், பாரம்பரியமும் வாய்ந்த இயற்கை அழகுடன் கூடிய சிலைகளை தயாரித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்கள் மேம்பாட்டிற்கு வங்கி கடன் வழங்கி உதவிட அதிகாரிகள் முன் வர வேண்டும்.