| ADDED : செப் 18, 2011 10:20 PM
விழுப்புரம்:தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் தேவையான
அடிப்படை வசதிகளை செய்யாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தமிழகத்தில், சென்னை முதல் உளுந்தூர்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு
வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம்,
திருச்சி வரையும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடியும் நிலையில்
உள்ளது. இந்த சாலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் 40 கி.மீ., தூரம்
இடைவெளியில் 'டோல்கேட்' அமைத்து வாகனங்களுக்கு வரி வசூல் செய்கின்றனர்.
இவ்வாறு 20 முதல் 22 ஆண்டுகள் வரை வாகன வரி வசூல் செய்து கொள்ள மத்திய
அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சில அடிப்படை வசதிகளை செய்து
தரும் ஒப்புதலோடு அனுமதி பெற்றுள்ளனர்.இவ்வாறு வசூல் செய்யும் தொகையில்
சாலை பராமரிப்பு மட் டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில்
மின் விளக்குகள் அமைத்தல், சாலை ஓரங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து
தண்ணீர் விநியோகம் செய்தல் மற்றும் வாகன ஓட்டிகள் தங்குவதற்காக ஓய்வு
இல்லங்கள் அமைத்து பராமரித்தல் உள்ளிட்டவைகளை இந்த நிறுவனங்கள் செய்ய
வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும் போது இந்த நிறுவனங்கள்
மூலம் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு
அழைத்து செல்லும் பணியினையும் இந்த தனியார் நிறுவனங்கள் செய்ய
வேண்டும்.ஆனால் தற்போது தேசிய நெடுஞ் சாலைகளை பராமரித்து வரும் தனியார்
நிறுவனங்கள் வாகனங்களுக்கான கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே குறியாக செயல்
படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை சரிவர
பராமரிப்பு செய்வதில்லை. இந்த இடங்களில் மின் விளக்கு, கழிப்பிடங்கள்
மற்றும் போதிய குடிநீர் வசதி செய்வதில்லை. இதனால் இந்த இடங்களில் இரவு
நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வரு கின்றன. அதேபோல் நெடுஞ்சாலை
ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் பெயரளவில் குடிநீர் தொட்டிகள்
அமைத்திருப்பது காட்சிப் பொருளாகவே உள்ளது. இதில் குடிநீர் சப்ளை
இல்லாததால் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குடிநீர் கிடைக்காமல்
சிரமப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு மட்டுமின்றி,
பயணிகளின் குறிப்பிட்ட அடிப்படை தேவைகளை வழங்குவதற்காகவும் தனியார்
நிறுவனங்கள் கணிசமான தொகையை வரியாக வசூலிக்கின்றனர். பயணிகளுக்கும், வாகன
ஓட்டிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்யாததால் இவர்கள்
சிரமத்திற்குள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேசிய
நெடுஞ்சாலையில் வரி வசூல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசு
விதிமுறைகளின் படி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.