| ADDED : செப் 18, 2011 10:35 PM
விழுப்புரம்:சட்டசபையில் மக்களுக்காக சிறந்த எதிர்கட்சித் தலைவராக
விஜயகாந்த் சிறப்பாக போராடுவார் என்று எம்.எல்.ஏ., வெங்கடேசன்
பேசினார்.விழுப்புரம் நகர 7வது வார்டில் மாவட்ட செயலாளரான எம்.எல். ஏ.,
வெங்கடேசன் கட்சி கொடியேற்றி வைத்து பேசியதாவது: ஊழல் நிறைந்த, மக்கள்
விரோத தி.மு.க., ஆட்சியை நீக்க தொண்டர்களின் விருப்பப்படி அ.தி.மு.
க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். அந்த தேர்தலில்
தி.மு.க.,ஆட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்தனர்.தி.மு.க.,வினரின் கொள்ளையை தடுக்கவும், சுரண்டல்களை தட்டிக் கேட்கவும்
அ.தி.மு.க., வுடன் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 203 இடங்களில்
வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க., எதிர்கட்சி தகுதியை இழந்தது.தினமும் வசனம்
பேசிய தி.மு.க.,வினர் இன்று காணாமல் போய் விட்டனர். கடந்த 1949ல் கட்சி
துவங்கிய தி.மு.க., 1962ல் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. 16 ஆண்டுகள்
கழித்து 1967ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் 2005ல்
கட்சி துவங்கிய தே.மு.தி.க., 6 ஆண்டுகளில் எதிர்கட்சியாக
உயர்ந்துள்ளது.தே.மு.தி.க., வினர் உழைக்க தெரிந்தவர்கள். ஆனால் பிழைக்கத்
தெரியாதவர்கள். எதிர்கட்சியான தே.மு.தி.க., சட்டசபையில் நடக்கும்
நிகழ்வுகளை 6 மாதங்களாவது கவனித்த பின் தங்களின் கருத்துகளை சொல்ல முடியும்
என்று விஜயகாந்த தெரிவித்துள்ளார்.29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் மக்களுக்காக
சிறப்பாக போராடுவார். அரசியலில் தினமும் ஒரு சூழ்நிலை உள்ளது. முழுக்க
இளைஞர்களை கொண்டு தே.மு.தி.க., செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின்
பொறுமையே எங்களுக்கு வெற்றியைத் தரும். எந்த சூழலிலும் விஜயகாந்த் காட்டும்
வழியை நாங்கள் பின்பற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு எம்.எல்.ஏ., வெங்கடேசன்
பேசினார்.