| ADDED : ஜன 23, 2024 05:21 AM
செஞ்சி நகரில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 டன் வரை குப்பை சேர்கிறது. வளர்ந்து வரும் நகரம் என்பதால் இந்த அளவு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். 25 ஆண்டுகளுக்கு முன் தேசூர்பாட்டை மாதா கோவில் அருகே குப்பை கொட்டி வந்தனர்.நகரம் விரிவடைந்து மாதாகோவிலை சுற்றி உள்ள விவசாய நிலங்கள் வீடுகளாக மாறியதால் குப்பைகளை நாட்டேரியில் கொட்டத் துவங்கினர். அந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசு படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை வண்டிகளை சிறை பிடித்தனர்.அதன்பிறகு சிங்கவரம் சாலையில் பைபாஸ் அருகே குப்பைகளைக் கொட்டினர்.அங்கு இடம் பற்றாக்குறை ஏற்பட்டதால் சங்கராபரணி ஆறு, மேல்களவாய் ரோடு, சேத்துப்பட் ரோட்டிலும் கொட்டினர்.சங்கராபரணி ஆற்றில் கொட்டியதால் ஆறு மாசடைந்தது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது புதிய பைபாஸ் சாலையில் கொட்டி வருகின்றனர். அதிகாலை வேளையில் குப்பைகளை கொட்டி தீவைத்து எரிக்கின்றனர்.பனிப்பொழிவுடன் குப்பைகளில் இருந்து வரும் புகையும் சேர்ந்து சாலையில் எதிரே வரும் வாகனங்களின் பார்வையை மறைக்கிறது. கடந்த 18ம் தேதி குப்பைகளை எரித்த போது இந்த வழியாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி இருவரும் படுகாயடைந்தனர்.தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாசார நகரமான செஞ்சி வழியாக சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.தமிழகத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நகரமாகவும் செஞ்சி உள்ளது. பைபாஸ் சாலையில் குப்பைகளைக் கொட்டி எரிப்பது நாட்டின் மீதான நன் மதிப்பை குறைக்கும். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.