வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்காமல் இழுபறி நீடித்து வருவதால் மாணவர்கள் போதிய வகுப்பறை இன்றி தவித்து வருகின்றனர்.வானுார் பகுதியில் 81 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், கழுப்பெரும்பாக்கம், திருச்சிற்றம்பலம், கோட்டக்குப்பம், வானுார், புளிச்சப்பள்ளம், உப்புவேலுார், கிளியனுார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.வானுார் பகுதியில் அரசு கல்லுாரிகள் இல்லாத நிலையில், பள்ளி கல்வியை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மேல் படிப்புக்கு சிரமம் அடைந்தனர். கல்லுாரிக்கு செல்ல விரும்பும் மாணவர்கள், 40 கி.மீ., துாரத்தில் உள்ள திண்டிவனம், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து படித்தனர். மேலும், தமிழகத்தையொட்டி புதுச்சேரியில் அரசு கல்லுாரிகள் இருந்தாலும், அந்த பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வானுார் பகுதியில், ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வானுாரில் அரசு கலைக் கல்லுாரி கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுாரி துவங்கப்பட்டு, தற்காலிகமாக திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டத்தில் தற்போது வரை இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் இதுவரை 2 பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியே சென்று விட்டனர்.தற்போது மூன்றாம் ஆண்டில் 300 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் 330 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர வாய்ப்பு உள்ளது. இதனால், கல்லுாரியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வாய்ப்பு உள்ளது. தற்காலிக கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மயிலம் ரோடு சேதராப்பட்டு எல்லையில், திருச்சிற்றம்பலம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு 13 கோடியே 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது, இரண்டு தளங்களுடன் கூடிய புதிய கல்லுாரி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே கல்லுாரி கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், லோக்சபா தேர்தல் விதிகள் அமலில் இருந்ததால், திறக்கப்படவில்லை.தேர்தல் முடிவடைந்து கட்டடம் திறக்கப்படும் என மாணவர்களும், பேராசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதன் காரணமாக அனைத்து திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் கல்லுாரி திறக்கும் முயற்சியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பிறகே கல்லுாரி திறக்க வாய்ப்புள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய கல்லுாரி திறக்காமல் இழுபறி நீடித்து வருவதால் மாணவர்கள் போதிய வகுப்பறை இன்றி தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், புதிய கல்லுாரி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.