இருமல், தும்மல் பிரச்னை அதிகரிப்பு கவனம் செலுத்துமா சுகாதாரத்துறை
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் மாறி வரும் பருவ நிலையால் எப்போதும் இல்லாத அளவில் இருமல், தும்மல், மூக்கடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் நிறைந்த மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் மட்டும் குளிர் இருக்கும். மற்ற மாதங்களில் வெயில் வாட்டி எடுக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்துள்ளது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வராத நிலையில் சில நாட்களாக மாவட்டத்தில் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. அதிகாலையில் மட்டுமின்றி பகலிலும் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பலருக்கு இது வரை இல்லாத அளவிற்கு அதீதமான மூக்கடைப்பு, இருமல், தும்மல் காணப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் அடுத்து வரும் நாட்களில் இப்பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொது சுகாதாரத்துறையினர் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்தி மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் பரவாமல் இருக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.