விழுப்புரம், கள்ளக்குறி ச்சி மாவட்டத்தில் 11 எம்.எல்.ஏ., க்கள் உள்ளனர். இதில் பேர் தி.மு.க., என்றாலும் 2 மாவட்டத்திற்கும் சேர்த்து, ஆளுங்கட்சி சார்பில் ஒருவர் கூட அமைச்சரவையில் இல்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வேலு பொறுப்பு அமைச்சராக உள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைச்சராக இருந்த பொன்முடி, மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதால், தற்போது இரண்டு மாவட்டத்திலும், தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக கடலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை கட்சி தலைமை நியமித்துள்ளது. வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய 3 சட்டசபை தொகுதியில், செஞ்சி தொகுதியில் மட்டும் தற்போதுள்ள மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மயிலம் தொகுதியில் பா.ம.க ., திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., கைவசம் உள்ளது. ஆரம்பத்தில் மண்டல பொறுப்பாளராக பொறுப்பேற்ற அமைச்சர் பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், வடக்கு மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதியிலும் 2026 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். அதன் பிறகு நடந்த கூட்டங்களில், கட்சியில் செயல்படாத நிர்வாகிகள் யார் என்று லிஸ்ட் எடுத்து, கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்து, பாரபட்சம் பார்க்காமல் மாற்றி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிப்பேன் என எச்சரித்தார். ஆனால், இதுவரை செயல்படாத நிர்வாகிகளை நீக்காமல் மவுனம் காத்துவருவதாக, உடன் பிறப்புகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதேபோல், கூடுதலாக ஒன்றியங்களை பிரித்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியும், இதுவரை கூடுதல் ஒன்றிய செயலாளர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதேபோல் வடக்கு மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சி பதவிகளை வைத்திருந்தும், கூடுதல் பதவியை வைத்துள்ளவர்கள் பற்றி கண்டு கொள்ளாமல், மற்றவர்களுக்கு பதவியை பிரித்துக் கொடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த மயிலம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர் குறித்து விவாதம் நடந்தது. அதில் மாஜி அமைச்சர், தொகுதியில் தி.மு.க.,நிர்வாகிகள் பலரை தங்கள் கட்சிக்கு ஆதரவாகவும், சிலரை கட்சியில் இணைத்து வருவது குறித்து கேள்விப்பட்ட அமைச்சர், 'மயிலம் தொகுதியில் அ.தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்வதாக இருந்தால் பதவியில் இருங்கள், இல்லையேல் செயல்படாத நிர்வாகிளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிளை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்' என வழக்கமான பேசுவதையே பேசினார். இதுபோல் பல முறை கூறியும், இதுவரை செயல்படாத நிர்வாகிகள் என ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை கையில் சாட்டையை கொடுத்தும் இவர் சுழற்றாமல் ஓடுகிற படத்தையே மீண்டும் மீண்டும் ஓட்டுகிறாரே என புலம்பி வருகின்றனர்.