குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் அவசர உதவி மையத்தில் பணியாற்றிட தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு : தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ்மிஷன் வட்சாலயா திட்டத்தின், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. இதில் பணிபுரிய ஒப்பந்த பணியாளர்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தைகளுக்கான அவசர உதவி அலகு ஒருங்கிணைப்பாளர் ( ஒரு பணி) பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலைப் பட்டம் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலன் சார்ந்த துறையில் 2 ஆண்டுகள் அனுபவம், கணினி கையாள்வதில் திறமை பெற்றிருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கான அவசர உதவி மைய மேற்பார்வையாளர் (3 நபர்கள்) பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், குறிப்பிட்ட இளங்கலைப் பட்டம், கணினி இயக்குவதில் திறமைவாய்ந்தவராகவும், 42 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். வழக்குப் பணியாளர் (3 நபர்கள்) பதவிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தகவல் தொடர்பு திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பணிகளுக்கும், விண்ணப்பதாரர், 42 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் அவசர உதவி மையத்தில் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை விழுப்புரம் மாவட்ட இணைய தளத்தில் https://villupuram.nic.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்தும் பெற்று, 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.