ரயிலில் பெண் பயணிக்கு தொந்தரவு : வாலிபர் கைது
விழுப்புரம்:விழுப்புரத்தில், ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம், நாகர்கோவில் - தாம்பரம் செல்லும் ரயிலில் திரும்பினார். நேற்று அதிகாலை 1:40 மணிக்கு ரயில், விழுப்புரம் நிலையம் அருகே வந்தபோது, ரிசர்வ் செய்யப்பட்ட அதே பெட்டியில் மேல் படுக்கையில் பயணித்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பெரிய கோவிலான் குளத்தை சேர்ந்த ராமதுரை மகன் விக்னேஷ், 25; என்பவர், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அப்பெண் கூச்சலிட்டதும், அதே கோச்சில் இருந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே ரோந்து போலீசார் வந்தனர். விழுப்புரம் ரயில் நிலையம் வந்தவுடன், ரயில்வே பெண் தலைமை காவலர் சாமுண்டீஸ்வரியிடம், அப்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்து, விழுப்புரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைதான விக்னேஷ் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில், பணிபுரிகிறார்.