உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மம்சாபுரத்தில் பயன்பாடற்ற கடைகள் : அரசு பணம் வீணாகும் அவலம்

மம்சாபுரத்தில் பயன்பாடற்ற கடைகள் : அரசு பணம் வீணாகும் அவலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் பயன்பாடற்று கிடக்கும் 'தாட்கோ' சார்பில் கட்டப்பட்ட கடைகளை பயன்படுத்ததால் அரசு பணம் வீணாகி வருகிறது. மம்சாபுரம் பேரூராட்சியில் தாட்கோவின் மூலம் கடந்த 1996ம் ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் மம்சாபுரம், காந்திநகர், நரையன்குளம் பகுதிகளில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் இவ்வளாகம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை பெரும்பான்மையான கடைகள் மூடிய நிலையிலே உள்ளது. மம்சாபுரம், காந்தி நகரில் சிலர் வணிக வளாகத்தில் கடைகள் நடத்தினாலும் ஒரு சில கடைகளில் இருந்து மட்டும் தாட்கோ வாடகை வசூலிக்கிறது.

காலியாக கிடக்கும் பெரும்பான்மையான கடைகளை மக்கள் தங்கள் வீடுகளாகவும், சிலர் ஆடுகளை அடைக்கவும், விறகு அடுக்கி வைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். பல கடைகளில் ஷட்டர்கள் துரு பிடித்து செயல் இழந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் வணிக வளாகத்தை சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். பஸ்வசதி அதிகம் இல்லாத நரையன்குளம், காந்தி நகர் பகுதிகளில் குறைந்தளவே மக்கள் தொகை இருப்பதாலும் இப்பகுதியில் வணிக வளாகம் எந்த வித செயல்பாடின்றி அரசின் லட்சக்கணக்கான பணம் வீணாகியுள்ளது. இதை தவிர்க்க திறக்கப்படாமல் கிடக்கும் கடைகளை மாற்று பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அரசுக்கும் வருமானம் ஏற்படுத்த தாட்கோ நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்